விஜயவாடாவில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலரஞ்சலி-முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்பு

திருமலை :  விஜயவாடாவில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் மலர்வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் பணியின்போது வீரமரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம்தேதி ‘வீரவணக்க நாளாக’ கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு நினைவு கூறும் விதமாக மலர் அஞ்சலி செலுத்தப்படும். அதன்படி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

இதில், முதல்வர் ஜெகன்மோகன் கலந்துகொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பணியின்போது உயிர் நீத்தி தியாகிகள் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: மாநிலத்தில் 11 போலீசார் பணியின்போது வீரமரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும் போதுமான ஓய்வு எடுக்கவும் நாட்டில் முதல்முறையாக  யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் வார விடுமுறை கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் கொரோனா கட்டுபாடுகளால் சில மாதங்களுக்கு பிறகு  செயல்படுத்தப்படவில்லை என்றாலும், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் வார விடுமுறை வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும். காவல் துறைக்கு 2017ம் ஆண்டு முதல் நிலுவை வைத்திருந்த நல உதவி நிதி ₹15 கோடி உடனடியாக வழங்கப்படும்.

காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பும் விதமாக விரைவில் காவலர் தேர்வு நடைபெறும். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுத்து  கிராம மற்றும் வார்டு செயலகங்கள் அளவில் காவல் துறையில் 16 ஆயிரம் பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும்  பயிற்சித் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு காவல் துறையால் ₹5 லட்சம் வழங்கப்பட்டால், அதே அளவிற்கு மாநில அரசு சார்பில் இருந்து மேலும், ₹5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளோம்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்பு மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனாவால் இறந்த காவல்துறை மற்றும் பிற அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கும் வரும் 30ம் தேதிக்குள் கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நம் பிள்ளைகள் போதைக்கு அடிமையானவர்கள் எனும் வகையில் உலகுக்கு காட்ட முயற்சி நடைபெற்று வருகிறது.   மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குஜராத் துறைமுகத்தில் பிடிப்பட்ட போதை மருந்திற்கும் ஆந்திராவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. அதனை காண்பித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர்  விளக்கத்தை வழங்கினாலும் டிஜிபி கூறினாலும் ஏற்க மறுக்கிறார்கள்.

நம் மாநிலத்தின் நற்பெயருக்கும், இங்குள்ள இளைஞர்களின், மக்களின் எதிர்காலத்தை கறை படிந்த முத்திரையாக்க எதிர்கட்சியினர்  தயாராகி குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் காவல்துறையினர் அனைவருக்கும் நான் சொல்லக்கூடிய ஒரே விஷயம், அமைதியும் பாதுகாப்புமே அரசின் முன்னுரிமை.  

இந்த விஷயத்தில் யாரும் விதிவிலக்கல்ல. அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு காப்பது  மிக முக்கியமானதாகும். இவ்வாறு அவர் பேசினார்.  இதில், உள்துறை அமைச்சர்  சுச்சரிதா, இந்து அறநிலையத்துறை ஸ்ரீனிவாஸ், உணவு பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கடேஸ்வர ராவ் (நானி), முதன்மைச் செயலாளர் சமீர் சர்மா, டிஜிபி கவுதம் சவாங் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சித்தூர்: சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் வீர வணக்க நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கலெக்டர் முருகன் ஹரிநாராயணன், மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கி மைதானத்தில் உள்ள நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து, கலெக்டர் முருகன் ஹரிநாராயணன் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்றால் அது போலீசார் ஆற்றிய சிறப்பான பணி. கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அப்போதும் கூட போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு உயிரை பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தல் குறைந்துள்ளது. இதற்கு போலீசார் இரவு, பகல் பாராமல் ஆற்றிய பணியே முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.இதில், எஸ்பி செந்தில்குமார், குற்றவியல் எஸ்பி வித்யாசாகர் நாயுடு, ஏஎஸ்பி மகேஷ், டிஎஸ்பி சுதாகர் உட்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: