×

குடுமியான்மலை அண்ணா பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் நடவு செய்யும் பணி-கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்

விராலிமலை : குடுமியான்மலை அண்ணா பண்ணையில் உள்ள மாநில விதைப்பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற புதிய நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது.உடல் வளர்ச்சிக்கு தேவையான மருத்துவ குணங்களை கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, தங்க சம்பா, தூய மல்லி, சீரக சம்பா ஆகிய நெல் ரகங்கள் 6 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நடவு செய்யும் பெண்களிடம் புதிய நெல் ரக நாற்றுகளை வழங்கி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கலெக்டரிடம் நெல் நாற்றுகளை பெற்ற பெண்கள் குலவைப் பாடல் பாடி மகிழ்ச்சியை தெரிவித்து நடவுப் பணியில் ஈடுபட்டனர். புதிய நெல் ரகங்கள் கருப்பு கவுனி, தங்க சம்பா, நிலக்கடலை பயிர், வேளாண் இடுப்பொருட்களான வேப்பம்புண்ணாக்கு, அசோலா, தொழுஉரம், மண்புழுஉரம் ஆகியவற்றை கலெக்டர் கவிதா ராமு பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் கவிதா ராமு கூறியது:

குடுமியான்மலை அண்ணாபண்ணையில் அரசு விதைப்பண்ணை 601.95 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தென்னை, புளி, இலவம் போன்ற மரங்கள் 97.07 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 ஏக்கர் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. பாசன வசதிகள் 90 ஏக்கர் பரப்பிலும் மற்றும் 53 ஏக்கர் மானாவாரி பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 143 ஏக்கரில் 14 திறந்தவெளி கிணறுகளின் உதவியுடன் பயிர் சாகுபடி நடைபெறுகிறது. அண்ணா பண்ணையை முன்மாதிரி பண்ணையாக மாற்ற ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு விதைப்பண்ணைகளிலும் பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 200 ஏக்கர் பரப்பில் பாரம்பரிய நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வல்லுநர் விதை உற்பத்தியும் செய்து தரப்படுகிறது. இப்பண்ணை தமிழ்நாட்டின் விதைத் தேவையை பூர்த்தி செய்ய விதை பெருக்க சங்கிலியில் முக்கியமான அங்கம் வகிக்கிறது என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, ஸ்டாமின் நிலைய இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கணேசன், வேளாண் துணை இயக்குநர் மோகன்ராஜ், வேளாண் உதவி இயக்குநர் பழனியப்பா, பண்ணை மேலாளர் சதீஸ், வேளாண் அலுவலர் மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Kavita Ramu ,Kudumiyanmalai ,Anna Farm , Viralimalai: New varieties of paddy produced by the State Seed Farm at Kudumiyanmalai Anna Farm
× RELATED தொடர் மழையால் புதுக்கோட்டை...