×

வருவாய் குறைவாக உள்ள கோயில்கள், வருவாய் அதிகம் உள்ள கோயில்களோடு இணைக்க நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு தகவல்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (22.10.2021) காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரம்  அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசும்போது, உயதகிரி சாமைய்ய ஜமீன்தார் என்பவரின் மகன் வெங்கைய்ய என்பவர் இந்த கோயில்களுக்கு  பூஜைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து தடையின்றி நடத்துவதற்கு இரண்டு ஜமீன் கிராம நிலங்களை உயில் சாசனமாக 177 ஏக்கர் இடத்தை 1984 ல் திருக்கோயிலுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும்.

ஆனால், இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்பு திருக்கோயில் சிதிலடைந்து உள்ளதை கண்டு மனம் கனமாக மாறி உள்ளது. இந்த கோயில் புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் மேற்கொண்டு  விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். இரண்டு குளங்கள் ஊராட்சி வசம் உள்ளது அதனை மீட்டு சீரமைக்கப்படும். குருக்கள் இல்லம், சின்ன, பெரிய என இரண்டு சத்திரங்கள் இருபது வருடங்களாக இடிந்த நிலையில் உள்ளது. அதனை பழமை மாறாமல் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட வரைபடம் தயார் செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற ருத்ராட்ச பந்தலில் இருந்து சுவாமி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று வந்தது. கடந்த பல வருடங்களாக ருத்ராட்ச பந்தல் உடைந்த நிலையில் உள்ளதால்   அபிஷேகம் நடைபெறவில்லை. பந்தல் சரிசெய்யப்பட்டு மீண்டும் அபிஷேகம் நடைபெறும்.  வருவாய் குறைவாக உள்ள கோயில்கள், வருவாய் அதிகம் உள்ள கோயில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இறைப்பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துள்ள அர்ச்சகர்கள் வாழ்வில் முதல்வர் ஒளி ஏற்றுவார். இக்கோயில் அர்ச்சகர்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த திருக்கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் இடத்தின் பெயரில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டு அவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் தந்துள்ளனர். மேலும் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளோம். அந்த நிலத்தை அரசு மீட்கும் பணியை மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



Tags : Minister ,Sekarbabu , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
× RELATED முதலில் டோக்கன் வாங்கியது திமுக...