×

பிளஸ் 2 துணைதேர்வு மறு மதிப்பீடு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட துணைத் தேர்வுக்கு பிறகு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிடுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் படிக்காமலும், ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்களும் தேர்வு எழுத வசதியாக, துணைத் தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு, அதில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டு பல மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் சிலருக்கு மதிப்பெண்களில் மாற்றம் வந்துள்ளது.

மதிப்பெண்களில் மாற்றம் வந்துள்ள  மாணவ, மாணவியரின் தேர்வு எண்கள் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும். இந்த பட்டியலில் இடம்பெறாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவ, மாணவியர் மட்டும் மேற்கண்ட இணைய தளத்தில் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றுகளை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிறவித்துள்ளது.

Tags : selection
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...