எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கல்வெட்டு திறந்த சசிகலா மீது வழக்கு?: சட்ட வல்லுநர்களுடன் போலீசார் ஆலோசனை

சென்னை: எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றியும், கட்சியின் பொதுச் செயலாளர் தான் என்று கல்வெட்டு திறந்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரின்படி சசிகலா மீது மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்ய சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை, ₹10 கோடி அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில்  அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என பிரிந்தது. இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதேபோல், சசிகலா தரப்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் நிற்க இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

 பிறகு அதிமுக சார்பில் மதுசூதனன் இரட்டை மின்விளக்கு கம்பத்திலும், டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்திலும் போட்டியிட்டனர். அதில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.அதன் பின், அதிமுக அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தில் ₹50 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னம் பெற சசிகலா தரப்பில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உதவியை நாடினர். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நட்சத்திர ஓட்டலில் இடைத்தரகராக இருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் ₹1.3 கோடி பணத்துடன் கைது செய்தனர். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் மீதும் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதைதொடர்ந்து டெல்லி நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் அதிமுக சின்னமான இரட்டை இலை அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் அணிக்கு வழங்கியது. பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக அதிகாரப்பூர்வமான கொடியை தற்போது வரை பயன்படுத்தி வருகிறார். அதோடு இல்லாமல் அதிமுக 50ம் ஆண்டு விழாவின்போது தி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிமுக கொடியை ஏற்றியும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று கல்வெட்டும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.மேலும், தென் மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொளள் சசிகலா முடிவு செய்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர். அதில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைதியான முறையில் அதிமுக செயல்படுகிறது. அதை சீர்குலைக்கும் வகையிலும், அதிமுகவில் எந்தவித அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இல்லாமல் கடந்த 17ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் முன்பு அதிமுக அதிகாரப்பூர்வ கொடியை சட்டத்திற்கு விரோதமாக சசிகலா ஏற்றி உள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று நீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக அவர் பெயரில் கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.புகாரின்படி மாம்பலம் போலீசார், அதிமுக கட்சி கொடி பயன்படுத்தியது மற்றும் பொதுச்செயலாளர் என கல்வெட்டு வைத்தது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த ஆலோசனையை தொடர்ந்து சசிகலா மீது வழக்கு பதிவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>