‘நான் செயின் ஸ்மோக்கர்’ என்று கூறி ரகளை விமானத்தில் ரவுண்டு ரவுண்டா புகைவிட்ட தஞ்சை பயணி கைது

சென்னை: நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது சிகரெட் புகைத்து ரவுண்டு ரவுண்டா புகைவிட்டு சக பயணிகளுக்கும், பணிப்பெண்களுக்கும் பெரும் இடையூறு செய்த தஞ்சை பயணியை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் 149 பயணிகளுடன் வந்தது. அந்த விமானத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபீக் (53) பயணம் செய்துள்ளார். இவர், துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணி முகமது ரபீக், தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகைத்துள்ளார். ரவுண்டு ரவுண்டாக புகை விட்டதால், விமானத்தின் உள்ளே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த பயணி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்துள்ளார்.

பயணிகள் தட்டிக்கேட்டபோது, ‘நான் செயின் ஸ்மோக்கர்’ என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்று பிடிவாதமாக கூறியுள்ளார். விமான பணிப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முகமது ரபீக் அடிக்கடி சீட்டில் இருந்து எழுந்து விமானத்தின் கழிவறைக்கு சென்று புகை பிடித்துள்ளார். இதனால் பணிப்பெண்கள், விமான கேப்டனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கேப்டன், சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி விமான பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமானநிலைய ஓடுபாதையில் தயார்நிலையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் ஏறி புகைப்பிடித்து பயணிகளிடம் ரகளை செய்த முகமது ரபீக்கை பிடித்து கீழே இறக்கினர். குடியுரிமை, சுங்க சோதனை நடத்தி, விமானநிலைய போலீசில் அவரை ஒப்படைத்தனர்.இதுபற்றிய புகாரின் அடிப்படையில், விமான நிலைய போலீசார், பாதுகாப்பு சட்டத்தை மீறியது, பாதுகாக்கப்பட்ட இடத்தில் புகைபிடித்தது, சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தது உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

More