கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளியான ஜெயலலிதா கார் டிரைவர் மர்மச்சாவை மீண்டும் விசாரிக்க அதிகாரி நியமனம்: சேலம் எஸ்.பி அதிரடி நடவடிக்கை

சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மேற்கு மண்டல ஐஜி சேலத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் கொள்ளை நடந்தது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை  ேபாலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், ஏப்ரல் 27ம்தேதி இரவு, சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான், தனது மனைவி, மகளுடன் கேரளாவுக்கு காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தில் மனைவி, மகள் உயிரிழந்தனர். தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தற்போது மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், தனது தம்பி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார். கனகராஜின் மனைவி கலைவாணியும் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து கனராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் கனகராஜ் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவதால், அதிமுகவைச் சேர்ந்த விஐபிக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதற்கிடையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று சேலம் வந்தார். சரக டிஐஜி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர், தீவிர ஆலோசனை மேற்ெகாண்டார். டிஐஜி மகேஸ்வரி, சேலம் எஸ்.பி.ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி ஜித்தின்ஜாயிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஜித்தின்ஜாய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாளை ஊட்டியில் உள்ள பழைய டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னணியில் இருந்தவர்களை மக்களுக்கு தெரியப்படுத்தணும்

இது குறித்து கனகராஜின் அண்ணன் தனபால் கூறுகையில், ‘‘சம்பவம் நடந்தவுடன் இது திட்டமிட்ட கொலை என்றேன். ஆனால் அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அதிகாரிகள் ஏற்கவில்லை. அரசும் முறையாக விசாரிக்கவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையை துரிதமாக நடத்தி, இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது திட்டமிட்ட கொலை என்பதே எனது கருத்து,’’ என்றார்.

Related Stories:

More