திமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை

புதுடெல்லி: திமுக.வில் உட்கட்சி தேர்தல் நடத்த அவகாசம் வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார். பின்னர், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தி.மு.க உட்கட்சி தேர்தலை நடத்த கால தாமதம் ஆகியுள்ளது.  இது குறித்த விளக்கத்தை தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம். தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால்தான்  திமுக உள்கட்சி தேர்தல் நடத்த தாமதம் ஆகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. எனவே, அதனை நடத்துவதற்கும் அவகாசம் கோரியுள்ளோம்.

குறிப்பாக, 30-06-2022 வரை உட்கட்சி தேர்தலை நடத்த அதாவது ஏழு மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், கொரோனா உள்ளிட்டவைகள் காரணமாக தான் உட்கட்சி  தேர்தல் நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இது தொடர்பாக பதிலை தெரிவிப்பதாக கூறினார். இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்திய ஒன்றிய அரசுக்கு  பாராட்டுகள். இதில் தமிழக அரசும் அதிக அளவிலான தடுப்பூசிகளை செலுத்தி உள்ளது. தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தடுப்பூசி  விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை  உயர்வை பொருத்தமட்டில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் மீது அதிக அளவிலான வரிகள்  விதிக்கப்படுவதால் தான் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனை ஒன்றிய அரசு  குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More