தெலுங்கு தேசம் அலுவலகம் மீதான தாக்குதலை கண்டித்து ஆந்திராவில் 36 மணி நேரம் சந்திரபாபு உண்ணாவிரதம்

திருமலை:  தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகம் மீது நடந்த தாக்குதலை கண்டித்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். ஆந்திராவில் போதை மருந்து, கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபிராம், சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது, முதல்வர் ஜெகன் மோகன் குறித்து விமர்ச்சித்ததால ஆத்திரமடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகம், பட்டாபிராமின் வீடு, கட்சி நிர்வாகிகள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 36 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நாளை இரவு 8 மணி வரை உண்ணாவிரதத்தை அவர் தொடர்கிறார்.

உண்ணாவிரதத்தை தொடங்கி சந்திரபாபு பேசியதாவது: ஆந்திராவை மையமாக கொண்டு ₹8 ஆயிரம் கோடி கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்காக வாட்ஸ்-அப் குழு ஏற்பாடு செய்து நாடு முழுவதும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியாக உள்ள நாங்கள் கூறினாலும், அதற்கு ஆதாரம் உள்ளதா? கடத்தல்காரர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என எங்களையே கேள்வி கேட்டு  மிரட்டி வருகின்றனர். குஜராத் மாநிலம், முத்ரா துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கன்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஹெராயின் போதை மருந்து ஒரு கிலோ ₹8 முதல் ₹10 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை மருந்து எந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது என்ற விசாரணையில் விஜயவாடாவில் உள்ள சத்திய நாராயணபுரம் என்ற முகவரி வந்துள்ளது.

சென்னையில் இருந்து கொண்டு ஆந்திராவை மையமாக நாடு முழுவதும் இந்த போதை மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. ஆந்திராவை மையமாக கொண்டு செயல்படும் இந்த போதை மருந்து மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டிய அவசியம், மாநில அரசு மட்டுமின்றி ஒன்றிய அரசுக்கும் உள்ளது. ஆந்திராவில் இருந்து செயல்படக் கூடிய போதை மருந்து, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா என நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். சந்திரபாபுவின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* செய்தி தொடர்பாளர் கைது

அரசு மீது வீண்பழி சுமத்தியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் பட்டாபி மீது கவர்னர் பேட் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

* போதைக்கு அடிமையா? ஜெகன் மோகன் ஆவேசம்

சந்திர பாபுவின் உண்ணாவிரதம் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் கூறுகையில், ‘ஆந்திராவில் சில கட்சிகள் இப்போது, மக்களிடையே ஜாதி, மத ரீதியிலான பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஆந்திர இளைஞர்களை போதைக்கு அடிமையானவர்கள் என்பது போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர்,’ என்று குற்றம்சாட்டினார்.

Related Stories: