தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு நாளை மறைமுகத் தேர்தல்: எஸ்பிக்கள் தலைமையில் போலீஸ் குவிப்பு..!

நெல்லை: தமிழகத்தில்  நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர்,   துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி  துணைத்  தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை (22ம் தேதி)  நடக்கிறது. இதையொட்டி அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக  பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்,  ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு  கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி  பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த 9ம் தேதியும் நடைபெற்றது.

இதற்கான வாக்கு  எண்ணிக்கை கடந்த 12ம்தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில்  2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 137 கிராம  ஊராட்சி தலைவர்கள், 3221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 151 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 1415  ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2865 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 19964  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி  பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த  ஊராட்சிகளில் நேற்று பதவியேற்றனர். இவர்கள் நாளை (22ம்தேதி) நடக்கும்  தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

நாளை  (22ம்தேதி) 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம்  பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3002 கிராம  பஞ்சாயத்துகளின் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு நாளை (22ம் தேதி) காலை  10 மணிக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு பிரச்னை ஏற்படும்  என்று கருதப்படும் இடங்களில் மறைமுக தேர்தலை வீடியோ மூலம் பதிவு செய்யவும்,  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு  மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட  ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர்,  கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் 9  மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை, தென்காசியில் 467 பதவிகளுக்கு தேர்தல்

நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் தலா 2 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 19  ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர், துணைத்தலைவர், 425 கிராம பஞ்சாயத்துக்களின்  துணைத் தலைவர்கள் நாளை (22ம்தேதி) நடக்கும் மறைமுக தேர்தலின் மூலம் தேர்வு  செய்யப்படுகின்றனர். இதில் நெல்லை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர்,  துணைத்தலைவர், 9 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர், துணைத்தலைவர், 204 கிராம  பஞ்., துணைத்தலைவர் ஆகிய 224 பதவிகளுக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒரு  மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 10 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்  மற்றும் துணைத்தலைவர், 221 கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆகிய 243  பதவிகளுக்கும் நாளை 22ம்தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது.

Related Stories:

More
>