பழநி- கொடைக்கானல் சாலையோரங்களில் விபத்துகளை தவிர்க்க புதர்களை அகற்றும் பணி தீவிரம்

பழநி:  விபத்துகளை தவிர்க்கும் வகையில் பழநி- கொடைக்கானல் சாலையோரங்களில் புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது. இத்தகைய கொடைக்கானலுக்கு பழநி வழியாகவும், கொடைரோடு வழியாகவும் செல்லலாம்.

தொடர் மழை காரணமாக பழநி- கொடைக்கானல் சாலையின் இருபுறங்களிலும் செடிகள் புதர்போல் முளைத்துள்ளன. இதனால் எதிரில் வாகனங்கள் வந்தால் ஒதுங்க முடியாத சூழல் நிலவி வந்தது. இதனை சரிசெய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பழநி- கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு வரை சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல் சாலையோர தடுப்புகளில் இரவில் எதிரொலிக்கும் ஸ்டிக்கர்களை அதிகளவு ஒட்ட வேண்டும். கொடைக்கானலில் ஆஃப் சீசன் துவங்க உள்ள நிலையில் விபத்து முன்னெச்சரிக்கையாக பழநி- கொடைக்கானல் சாலையின் இடைப்பட்ட பகுதியில் முதலுதவி மற்றும் மீட்பு மையம் ஏற்படுத்த வேண்டும். இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More