கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருச்செங்கோடு: ரிங் ரோடு திட்டம் நனவாகுமா?

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், ரிங் ரோடு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலால்  பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு, வருவாய் கோட்ட தலைநகராகவும், பெரிய சாலை சந்திப்பாகவும் விளங்குகிறது. சேலம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், ஜேடர்பாளையம், இறையமங்கலம் பகுதிகளில் இருந்து வரும் சாலைகள் திருச்செங்கோட்டில் கூடுகிறது. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய மகளிர் கல்லூரியும், பெரிய கூட்டுறவு விற்பனை சங்கமும் இங்குதான் உள்ளது. இங்கு ஜவுளித்தொழில், வாகனங்களுக்கு பாடிகட்டும் தொழில், லாரித்தொழில், ரிக் தொழில் வளர்ச்சியடைந்து வருவதால் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் அதிகமான அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு வாகனங்களை இயக்குகின்றன. இதுதவிர, கிழக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு செல்லவும், கேரளா செல்லவும் திருச்செங்கோடு வழியாகவே பயணிக்கின்றனர். இதனால் திருச்செங்கோடு நகரில் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாக உள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. நகரில் உள்ள கடைகளுக்கு வரும் டூவீலர்கள் சாலையை ஆக்கிரமிப்பதும், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது.

திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலை போக்க, நகரை சுற்றி ரிங்ரோடு அமைப்பது மட்டுமே நிரந்தரத்தீர்வாக அமையும். சங்ககிரி சாலையில் உள்ள பால்மடை, குமாரபாளையம் சாலையில் உள்ள தேவனாங்குறிச்சி, ஈரோடு சாலையின் தோக்கவாடி, வேலூர் சாலையின் மீன்கிணறு, நாமக்கல் - ராசிபுரம் சாலைகளின் குமரமங்கலம் பிரிவு ரோடு,  கொக்கராயன் பேட்டையின் ஆண்டிபாளையம், சேலம் சாலையின் சின்னதம்பிபாளையம் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் ரிங் ரோடு அமைந்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். பயணிகள் பஸ்களை தவிர எந்த வாகனமும், கல்லூரி, பள்ளி வாகனங்களும் திருச்செங்கோடு நகருக்குள் நுழைய வேண்டிய  அவசியம் ஏற்படாது.

தற்போது புறவழிச்சாலை திட்டம் மட்டுமே அரசிடம் உள்ளது. நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால், திட்டம் நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், திருச்செங்கோட்டின் கனவுத்திட்டமான ரிங்ரோடு திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார். தமிழக அரசும் திருச்செங்கோடு நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசலை போக்க, ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>