20% குழந்தைகளை தொழிலாளியாக மாற்றிய கொரோனா: மீண்டும் பள்ளிகளில் சேர்க்க மலைகிராமங்களில் விழிப்புணர்வு

சேலம்: கொரோனாவால் தொழிலாளியாக மாறிய குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் மலைகிராங்களில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டம் மிகவும் கொடுமையானது. இந்த காலகட்டத்தில் கோடீஸ்வரர் முதல் குடிசைவாசிகள் வரை அனைவரும் ஒவ்வொரு நிலையில் பாதிக்கப்பட்டனர் என்றால் அது மிகையல்ல. இதில் கந்துவட்டியின் பிடியில் சிக்கிய ஏழை குடும்பங்கள், குடும்பபாரம் சுமக்க தொழிலாளியாக மாறிய குழந்தைகள் என்று பல்வேறு அவலங்களும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கைகளாலும், முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பாலும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மெல்ல மீண்டு வந்துள்ளோம். இதன் எதிரொலியாக இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்புவரையிலான பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 1ம்தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி அரசு சார்பிலும், தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவால் தொழிலாளியாக மாறிய குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மலைகிராமங்களில் நடக்கும் இந்த விழிப்புணர்வானது மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்தவகையில் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தைகளோடு பெற்றோரும் கலந்து கொண்டனர். அப்போது கட்டாயமாக மீண்டும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று உறுதியேற்றனர். இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த மக்கள் இணையம் அமைப்பின் நிர்வாகி ராமு கூறியதாவது:  இந்திய மக்கள் தொகையில் 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 29 சதவீதம். 6லிருந்து 14 வரையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 19.29 சதவீதம். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் படி இந்த வயதுடைய குழந்தைகள் சட்டப்படி கல்வி பெற உரிமை உள்ளவர்கள். இந்தியாவில் 1.4 மில்லியன் பள்ளிகள் உள்ளன. 2.01மில்லியன் குழந்தைகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கிறார்கள். 9 முதல் 10 ஆம் வகுப்பில் 3.8 மில்லியன் குழந்தைகள் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கும், அதை தொடர்ந்து நடந்த அவலங்களும் 10ஆண்டுகளாக குறைந்து வந்த குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை உயரச்செய்துள்ளது.   

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு l 6 முதல் 11 வயது வரையிலான வயது உள்ள குழந்தைகளில் ஆண் குழந்தைகளில் 93 சதவீதமும் பெண் குழந்தைகளில் 92 சதவீதமும் பள்ளிக்கு போய்க்கொண்டிருந்தனர். 2 சதவீதம் குழந்தைகள் மட்டுமே வீடுகளில் நடைபெறும் தொழில்களில் உழைப்பவர்களாக இருந்தனர். 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் ஆண் குழந்தைகளில் 67 சதவீதமும் பெண் குழந்தைகளில் 80 சதவீதமும் பள்ளி செல்பவர்களாக இருந்தனர். ஆண் குழந்தைகளில் 21 சதவீதம் பேரும் பெண் குழந்தைகளில் 16 சதவீதம் பேரும் பணிகளுக்குச் செல்வோராக இருந்தனர். 15 முதல் 18 வரையிலான வயதுடையவர்களில் 40 சதவீத இளைஞர்களும் 54 சதவீத இளம் பெண்களும் பள்ளிகளுக்குச் சென்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் சராசரியாக இது 20சதவீதம் குறைந்து, குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதிலும் மலைகிராமங்களிலும், குக்கிராமங்களிலும் அதிகம்  பேர், குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். குழந்தைகளின் கல்வியே எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றபாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தநிலையில் நவம்பர் 1ம்தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே இடையில் தொழிலாளியாக மாறிய அனைத்து குழந்தைகளையும் மீண்டும் பள்ளிகளில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இதை அடிப்படையாக கொண்டு முதற்கட்டமாக மலைகிராமங்களிலும், குக்கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் கொரோனா கால இருள்விலகி குழந்தைகளின் கல்வி மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ராமு கூறினார்.

Related Stories:

More
>