போதை பொருள் வழக்கு!: மும்பை ஆர்தர் சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை நேரில் சந்தித்தார் நடிகர் ஷாருக்கான்..!!

மும்பை: மும்பை ஆர்தர் சிறைச்சாலைக்கு இன்று காலை சென்ற பாலிவுட் நடிகர் ஹாருக்கான், அங்கு அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை நேரில் சந்தித்தார். ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் ஷாருக்கான் சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ஹாருக்கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 3ம் தேதி, தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தாமேச்சா உள்ளிட்டோரை இன்று வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஜாமின் கோரி ஆர்யன் கான் தரப்பில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்க போதை பொருள் தடுப்பு பிரிவு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஆர்யன் கான் சார்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வரும் வரை ஆர்யன் கான் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மகன் ஆர்யன் கானை சந்திக்க மும்பை ஆர்தர் சிறைச்சாலைக்கு நடிகர் ஹாருக்கான் இன்று காலை சென்றார். இதற்கு முன்னதாக கடந்த வாரம் மும்பை சிறையில் இருந்த ஆர்யன் கான் உடன் அவரது தந்தை ஷாருக்கான் மற்றும் மனைவி கவுரிகான் ஆகியோர் வீடியோ கால் மூலம் பேசினர்.

Related Stories: