×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு சலுகை: காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் உறவினர்களுடன் பேச அனுமதித்த காவலர்கள் 7 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முதற்கட்டமாக 5 பேரும் அடுத்தடுத்து 4 பேர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வழக்கு விசாரணைக்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 28ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 9 பேரும் வேனில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 5 பேரும் ஒரு வாகனத்திலும் மற்றவர்கள் மற்றொரு வாகனத்திலும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது கோல்டுபீச் அருகே வாகனம் நிறுத்தப்பட்டு 5 பேரின் உறவினர்களையும் சந்திக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதி இன்றி சிறைக்கு செல்லும் வழியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறவினர்களுடன் சந்திக்க வைத்த இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வாகனத்தில் வந்த ஆயுதப்படை சிறப்பு உதவியாளர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags : Pollachi
× RELATED சென்னை தாம்பரம் அருகே...