தமிழக அரசு விழிப்புடன் இருக்கிறது!: புயல், வெள்ளம் குறித்து மக்கள் அச்சபட வேண்டாம்..அமைச்சர் எ.வ.வேலு பேச்சு..!!

சென்னை: தமிழக அரசு விழிப்புடன் இருப்பதால் புயல் மற்றும் வெள்ளம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். வேப்பேரி ஈ.வெ.ரா. பெரியார் சாலை, எழும்பூர் ரயில் நிலைய வளாகம், சோழிங்கநல்லூர் பக்கிம்காம் கால்வாய், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, 2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது போன்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும், முதலமைச்சரே பல இடங்களில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 2012 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கி இருப்பதாக எ.வ.வேலு கூறினார். மேலும் பல்லாவரம், துரைப்பாக்கம் சாலையில் 2.40 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு கண்கள் கொண்ட மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>