×

ஆவடி தொகுதியில் புதிய மின்மாற்றிகள், ஆழ்துளை கிணறுகள்: அமைச்சர் நாசர் இயக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட 9 இடங்களில் புதிதாக மின் மாற்றிகளும், 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகளையும் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கிவைத்தார். ஆவடி தொகுதிக்கு உட்பட்ட ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் புதிதாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகளில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதனால், குடியிருப்புகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி மக்கள் சிரமப்பட்டனர். மேலும், அவர்கள் தங்களது மின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து, கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகள் புகார் செய்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையில் திமுக ஆட்சி வந்தவுடன், ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால் வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசரிடம் அதிக திறன் கொண்ட மின் மாற்றிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேற்கண்ட பகுதிகளை ஆய்வு செய்து புதிய மின்மாற்றிகளை அமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆவடி மின்வாரியம் சார்பில் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருமுல்லைவாயல், பட்டாபிராம் ஆகிய 9 இடங்களில் ₹45 லட்சம் செலவில் 9 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதனை, நேற்று முன்தினம்  அமைச்சர் ஆவடி நாசர் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தார். இதோடு மட்டுமல்லாமல், அவர் திருமுல்லைவாயல் பகுதிகளான வைஷ்ணவி நகர், தேவி நகர், நாகம்மை நகர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், ரூ 24லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

மேலும், திருநின்றவூர் பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு அதிகாரிகளுடன் அமைச்சர் நாசர் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், அவர் பிரகாஷ் நகரில் உள்ள குப்பை கிடங்கையும் பார்வையிட்டார். மேற்கண்ட நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ்கண்ணா, திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், திமுக செயலாளர்கள் பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத் பொன். விஜயன், தி.வை.ரவி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Nassar , New transformers, deep wells in Avadi constituency: Minister Nasser put the drive
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...