கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு: அறநிலையத்துறை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து சமய கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் மற்றும் குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தும் அறநிலையத்துறை சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் காஞ்சி மாவட்ட அமைப்பாளர் லிங்கநாதன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சாரங்கன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சி மாவட்ட செயலாளர் நேரு, மலைவாழ் மக்கள் சங்கம் செல்வம், கோயில் நிலம் பயன்படுத்துவோர் சங்க மாவட்ட அமைப்பாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன்படி பல தலைமுறைகளாக கோயில் இடத்தில் வசிப்பவர்களுக்கு அந்த நிலத்துக்கான நியாயமான விலையை நிர்ணயித்து அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும்.

பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இறுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மோகனன் நன்றி தெரிவித்தார். இதில், சங்க நிர்வாகிகள் பெருமாள், ராஜா, சீத்தாராமன், லட்சுமிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: