கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வந்தபோது சலுகை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி

* நடுரோட்டில் வேனை திறந்து போலீசார் தாராளம்

* சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

* விசாரணை நடத்த சேலம் கமிஷனர் உத்தரவு

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை பார்க்க அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் அனுமதி அளித்ததுடன், நடுரோட்டில் வண்டியை நிறுத்தி கதவை திறந்து சலுகை காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, கமிஷனர் உத்தரவின்படி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் கொடுமை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதிஷ்  ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பொள்ளாச்சி நகர மாணவர் அணி அதிமுக முன்னாள் செயலாளரான அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் ஆகியோர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு நேற்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேனில் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியம் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அவர்களை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸ் வேனை பின் தொடர்ந்து கைதிகளின் உறவினர்கள் வந்துள்ளனர். திடீரென அவர்களுக்காக போலீஸ் வேன் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் வண்டியில் இருந்து இறங்கி வந்து உறவினர்களை கைதிகள் சந்தித்து பேசினர். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இதுபற்றி விசாரணை நடத்த உத்தர விட்டார். நேற்று இரவு கைதிகளை அழைத்துக்கொண்டு எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியம் சேலம் சிறைக்கு வந்தார். பின்னர் ஆயுதப்படைக்கு வந்த அவரிடம் உதவி கமிஷனர் எட்டியப்பன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 5 போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சேலம் வரும்போது, கைதிகளின் உறவினர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வண்டி மெதுவாக சென்றபோது அவர்கள், வண்டியை மறித்து  எங்களை பார்க்க அனுமதிக்கவேண்டும், இல்லை என்றால் வண்டியை விடமாட்டோம் என கூறினர். தேவையில்லாத பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதால் பார்க்க அனுமதித்தோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

7 போலீசார் சஸ்பெண்ட்

இதற்கிடையே, பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக எஸ்எஸ்ஐ சுப்பிரமணியம் மற்றும் போலீசார் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா நேற்றிரவு உத்தரவிட்டார். இது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories:

More
>