எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை தலை துண்டித்து கொலை: ஒரு தலைக்காதல் வாலிபர் வெறிச்செயல்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31). டிவி பழுது பார்க்கும் கடை ஊழியர். இந்த கடை அருகே உள்ள டைப் இன்ஸ்டிடியூட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படர்ந்தபுளியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மகாலட்சுமி பயிற்சி பெற்றுள்ளார்.

அப்போது சூரிய ராகவனுக்கும், மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.  இதுபோல் மகாலட்சுமியை சோழபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜிம் (22) ஒருதலையாய் காதலித்துள்ளார். அவர் கேட்டரிங் பயிற்சி முடித்து திருவிழாக்களில் சமையல் வேலை செய்துள்ளார். அவரிடம் மகாலட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே  சமூகத்தைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் இருவர் மீதும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்நிலையில் சூரிய ராகவன் - மகாலட்சுமி காதல் இரு வீட்டாருக்கும் தெரியவரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  இது ஆனந்தராஜிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சூரிய ராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி பழுதான எல்.இ.டி. டிவி ஒன்றை சூரிய ராகவன் வேலை பார்க்கும் கடையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார்.

தினமும் போன் செய்து டிவி சரி பார்த்தாச்சா என்று கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கேட்ட போது, சூரியராகவன் டிவி ரெடியாகி விட்டது என்றும் மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து திட்டமிட்டபடி ஆனந்தராஜ், ஒரு பையில் ஆடு வெட்டும் கத்தி, மிளகாய் பொடி ஆகியவற்றுடன் வந்துள்ளார்.

கடையில் இருந்த சூரிய ராகவனிடம், நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம் எனக்கூறி ஆனந்தராஜ் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றவே தான் வைத்திருந்த மிளகாய் பொடியை சூரியராகவன் முகத்தில் வீசி, கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் தலையை அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி தகவலறிந்து எட்டயுபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: