திருநம்பியாக மாறியவர் விருப்பப்படி செல்லலாம்: ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: மதுரை மாவட்டம், பேச்சிகுளத்தை சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகள் ஜெய்ஸ்ரீ (24). திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. டி.கல்லுப்பட்டியில் கணவருடன் வசித்த எனது மகளின் உடல்நிலை அடிக்கடி பாதித்தது. ஆக. 2ல் என் மகளும், பேரனும் என் வீட்டிற்கு வந்தனர். ஆக. 5ல் மகளும், அவளது தோழி துர்காவும் வெளியே சென்றனர். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் இணைப்பில் இல்லை.

எனது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இம்மனு நீதிபதி வீ.பாரதிதாசன், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பெண் திருநம்பியாக மாறிய நிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். ‘‘தன்னை யாரும் தடுத்து வைக்கவில்லை. தானாக விரும்பியே சென்னையில் வசிப்பதாகவும், தனது தாயுடன் செல்ல விருப்பமில்லை’’ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, ‘‘அவர் மேஜர் என்பதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’ எனக்கூறிய நீதிபதிகள் அவர் விரும்பியபடி செல்லலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

More
>