பாஜ மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் செய்கிறது: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

சென்னை: மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜ காத்துக்கொண்டிருக்கிறது என்றும், சிறுபான்மையினருக்கு இருந்த அச்சுறுத்தலை அடியோடு போக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் எம்பி தயாநிதி மாறன் கூறினார். ராயப்பேட்டை கிரசண்ட் மருத்துவமனையின் 75வது ஆண்டு தினம் மற்றும் மிலாது நபி திருநாள் கொண்டாட்டம் மருத்துவமைனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: கிரசன்ட் மருத்துவமனை அனைத்து மதத்தினருக்கும் இலவசமாக மருத்துவம் வழங்குவதை பாராட்டுகிறேன். இந்த மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயம் அனைத்து முயற்சிகள் எடுக்கப்படும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஒன்றை சொன்னார். ‘எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமில்லை, வாக்களிக்காதவர்களுக்கும் வருத்தப்படும் அளவுக்கு ஆட்சி செய்வேன்’ என்றார். நிச்சயம் அனைவருக்கும் சிறப்பான ஆட்சியை தருவார். கடந்த 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழகத்திற்கு விடியல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சிறுபான்மையினருக்கு இருந்த அச்சுறுத்தல்களை தமிழகத்தில் அடியோடு போக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிஏஏ சட்டத்திற்கு இந்தியாவிலேயே முதல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவரும் அவரே. சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவிலேயே இதை யாரும் செய்யவில்லை. திமுக அரசு தான் செய்துள்ளது. எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி, தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்ய பாஜ காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருபோதும் தமிழகத்தில் மத வெறுப்பு அரசியலை நாம் அனுமதிக்கக்கூடாது. அப்படி மதவெறுப்பை யார் இங்கு உண்டு பண்ணினாலும் சரி, அதற்கு முதல் ஆளாக அதை தடுக்கும் அரணாக இருந்து முதல்வர் நம்மை காப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: