×

மதுரை நிதி நிறுவன அதிபரை கடத்தி சரமாரி அடித்துக்கொலை: ரூ.200 கோடி பண இழப்பால் நடந்ததா? முதலீட்டாளர்களிடம் தனிப்படை விசாரணை

மதுரை: மதுரையை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார். ரூ.200 கோடியை இழந்ததால் இந்த கொலை நடந்ததா என தனிப்படை போலீசார்,  முதலீட்டாளர்களின் பட்டியலை பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை எல்லீஸ் நகர், கென்னட் ரோட்டை சேர்ந்தவர் முகமது அனீஷ் கமால் (49). இவரது  மனைவி ஷாம் பாத்திமா (43). மகன்கள் அலிஷாம், மற்றும் ஆசீம். இவர்  நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிதி நிறுவனத்தில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முதலீடு செய்தனர். அவர்கள் செலுத்திய பணத்திற்கு வட்டியுடன் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறியுள்ளார்.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தனது நிதிநிறுவனத்தை இவர் மூடி விட்டார். முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து, முகமது அனீஷ் கமால் உட்பட 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த முகமது அனீஷ் கமால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

வழக்கம் போல, கடந்த 18ம் தேதி ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக, காலையில்  வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்திட்டவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஷாம் பாத்திமா, கணவரை காணவில்லை என  எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் படுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கடந்த 18ம் தேதி ஜாமீன் கையெழுத்திட்டு விட்டு திரும்பிய அவரை, மர்மக் கும்பல் கடத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரியில் அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அக்கும்பல் சரமாரி தாக்கியுள்ளது. படுகாயமடைந்த அவரை, கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர், தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகிரி போலீசார் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் இவர் மீது புகார் கொடுத்த முதலீட்டாளர்கள் யார், எத்தனை பேர் புகார் கொடுத்தனர் என்ற பட்டியலை பெற்றுள்ளனர்.

பட்டியலில் உள்ள நபர்களிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் இவர் மீது கோபத்தில் இருந்தனர். இவருக்கு எதிராக நடவடிக்கை கோரி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப் மூலம் தகவல்கள் பரப்பி வந்ததாகவும் தெரியவருகிறது. எனவே ரூ.200 கோடி மோசடியால் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு யாரும் எதிரிகள் உள்ளனரா என மனைவி மற்றும் நிதி நிறுவன ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Madurai , Madurai financial institution CEO kidnapped and shot dead: Rs 200 crore lost? Personal inquiry with investors
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...