பொதுமக்களின் புகார் அடிப்படையில் 84 டாஸ்மாக் கடைகளை இடமாற்ற நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: .சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திருச்சி, சேலம், மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மண்டலங்களை சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட பொது மேலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: கடைகளை மூட வேண்டும் என்ற பொதுமக்களின் புகார் அடிப்படையில் 84 கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடந்து வருகிறது.

அதிக விலைக்கு விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1,599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன. அவற்றில் 933 பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பார்கள் திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடுவார். இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனை செய்யவில்லை, நாங்கள் ஆய்வுக்கூட்டத்தில் கூட பேசுவதில்லை. இனிவரும் காலங்களில் இலக்கு நிர்ணயம் இருக்காது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள், பத்திரிகையாளர்களை உள்ளிடக்கிய வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட உள்ளது. அந்த குழுவில் அமைச்சரும் இடம்பெற உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More