×

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவானதால் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை முடித்து வைக்கலாம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை:  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. 942 கோடி ரூபாய் அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2018 செப்டம்பர் 12ம் தேதி சிபிஐ மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் போன்றவைகளுக்காக கேசிபி இன்ஜினியர்ஸ், எஸ்.பி. பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்குகளில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்தேன்.

மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடுவதில்லை. தான் எம்.எல்.ஏ.வாகும் முன்பே தன் சகோதரர்களின் நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக இருந்தனர். மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் வழக்குகளை முடித்துவைக்கலாம் என்றார்.

அறப்போர் இயக்கம் தரப்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி, வேலுமணி மீது வழக்குபதிவது மட்டும் கோரிக்கை அல்ல என்றும், உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். அதன்பிறகு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விட்டதால் வழக்கை முடித்து வைக்கலாம் என்றார். வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த  வக்கீல் சதீஷ் பராசரன் வக்கீல் இளங்கோவன் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags : SB Velumani ,Tamil Nadu government , Former Minister SB Velumani's case may be closed in High Court: Tamil Nadu Govt.
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...