×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி சிறப்பு டிஜிபி மனு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை:  கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும் விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை எனவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்தேன். இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி விட்டது. சாட்சிகள் பலர் புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால் அவரை இடமாற்றம் செய்யக் கோரியும் அரசுக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவும் ஏற்கப்படவில்லை. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வக்கீல், விசாகா கமிட்டி அறிக்கை இதுவரை மனுதாரருக்கு வழக்கப்படவில்லை. குழுவை மாற்றியமைக்கும் கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு  தள்ளிவைத்தார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

Tags : DGP ,Villupuram ,IPS , Special DGP petitions to stay Villupuram court hearing on sexual harassment of female IPS officer: Court adjourns verdict
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...