வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பதவி: ரகசிய வாக்கெடுப்பு நடத்தி தேர்வு

சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வைகோ மகன் துரை வைகோவுக்கு பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 106 பேர் கலந்து கொண்டனர். இதில், 104 பேர் துரை வைகோவுக்கு பதவி வழங்க ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில், பெரும்பாலானவர்கள்  ஆதரவின் பேரில், துரை வைகோவை தலைமை கழக  செயலாளராக நியமனம் செய்வதாக வைகோ அறிவித்தார்.

இதுகுறித்து, வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுகவில் துரை வைகோ பணியாற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். நானும் துரை வைகோவின் அரசியல் நுழைவை 2 ஆண்டுகளாக தடுத்து வந்தேன். ஆனால், என்னால் இப்போது முடியவில்லை. என்னை மீறி எனக்கு தெரியாமல் அவரை பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். கூட்டத்தில் நிர்வாகிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவில், துரை வைகோவை தலைமை கழக செயலாளராக நியமனம் செய்துள்ளேன். முழு நேர கழகப்பணியை மேற்கொள்ளவும், சுற்றுப்பயணம் செல்லவும் அனுமதி அளித்துள்ளேன்.

கடந்த 1993ல் இருந்த நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இது வாரிசு அரசியல் அல்ல. வாரிசு அரசியல் செய்யும் தலைவர்கள் வரிசையில் நான் சேர மாட்டேன். நான் எதிர்பார்த்ததை விட திறமை, ஆளுமை, கவர்ச்சி, மனிதாபிமானம், பொதுவாழ்வுக்கு தேவையான அத்தனை குணாதிசயங்களும் துரை வைகோவிடம் உள்ளன. தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவதாக இருந்தால் கடந்த தேர்தலிலேயே நின்றிருப்பார். எனக்கு வயது ஆகி விடவில்லை. நான் இளமையாக உள்ளேன். இப்போது கூட வாலிபால் விளையாடுவேன். மரணம் வரை எனக்கு அரசியலில் இருந்து ஓய்வில்லை. திமுக உடனான கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: