புதுவண்ணாரப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிகரத்தை  நோக்கி வரலாறு படைக்கலாம் வா என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், சமூக ஆர்வலர் ஜி.வரதராஜன், நேசம் அறக்கட்டளை தலைவர் பாண்டி செல்வம் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பொன்னம்பல அடிகளார், திமுக மாவட்ட செயலாளர் இளைய அருணா, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கே.சுடர்கொடி, திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ் மற்றும்  கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், `அரசியல் களமாக இருந்தாலும் சரி, வேறு எந்த களமாக இருந்தாலும் என்ன தான் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்கள் உழைக்க களம் அமைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒருவர் வரலாறு படைக்க வேண்டுமென்றால் அதற்கான கட்டமைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தேவை. ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் 10 கல்லூரிகளை அறிவித்துள்ளார். இந்து அறநிலைய துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். அறிவித்த கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் 4 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது’  என்றார். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிலம்பாட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: