×

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகளும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், பரத சக்கரவர்த்தி, விஜயகுமார் மற்றும் முகமது ஷபீக் ஆகியோரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த 4 புதிய கூடுதல்  நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி  சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் பெண் வக்கீல்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், லா அசோசியேசன் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் மூத்த வக்கீல்கள், புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

புதிய நான்கு நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.நீதிபதி ஸ்ரீமதி சுந்தரம் 1989ல்  வழக்கறிஞராக பதிவுசெய்து 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர். அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், மத்திய அரசு, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் வழக்கறிஞராக  பணியாற்றியுள்ளார். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி வந்தவாசியை சேர்ந்தவர்.

திண்டிவனத்தில் பள்ளிப் படிப்பையும், புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர். புதுச்சேரி அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். நீதிபதி  ஆர்.விஜயகுமார் 23 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர். தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழக வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையத்தின் முக்கிய ஆதாரமாகவும் திகழ்ந்தவர். இவரது தந்தை  ஏ.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்.

நீதிபதி முகமது ஷபீக் சென்னை மண்ணடியை சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.எம்.அப்துல்காதர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். சென்னையில் பள்ளிப்படிப்பையும் சட்டக்கல்வியையும் முடித்தவர். 27 ஆண்டுகள் வக்கீலாக, உயர் நீதிமன்றத்தில் வரி தொடர்பான தீர்ப்பாயங்களிலும் ஆஜராகி உள்ளார். 2018ல் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டபோது அரசின் வரி தொடர்பான வழக்குகளை நடத்தியது மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதிலும் பங்களிப்பை அளித்தவர்.

Tags : Chennai High Court ,Chief Justice , Chennai High Court appoints 4 additional judges: The Chief Justice has been sworn in
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...