×

அண்ணா பல்கலை மற்றும் வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் துவக்கம்

சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-22 கல்வி ஆண்டுக்கான இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் முழுநேர பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற நவ.1ம்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வருகிற நவ.1ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு அடிப்படை கல்விகள், கற்றல் செயல்பாடுகள் உள்பட புத்தாக்க பயிற்சிகள் குறித்து நடத்தப்படும். அதன்பிறகு வருகிற நவ.15ம் தேதி முதல் படிப்புக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்படும். முதல் பருவத்தேர்வுகளுக்கான கடைசி வேலைநாட்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1ம்தேதி ஆகும். பருவத்தேர்வுகள் மார்ச் 7ம் தேதி நடத்தப்படும். அதேபோல், முதல் பருவத்தேர்வுக்கான முதல் மதிப்பீட்டுத் தேர்வு டிசம்பர் 23ம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதிக்குள்ளும், 2ம் மதிப்பீட்டு தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 24ம் தேதிக்குள்ளும் நடத்தவேண்டும்.

முதல் மதிப்பீட்டுக்கான அறிக்கையை ஜனவரி 5ம் தேதியும், 2ம் மதிப்பீட்டுக்கான அறிக்கையை மார்ச் 1ம் தேதியும் தேர்வு கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கும் வருகிற 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் கூடுதல் காலக்கெடு கேட்டால், வருகிற 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின்னர் படிப்புக்கான வகுப்புகள் இட வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்துவது பற்றி முடிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Anna University , Classes start on Nov. 1 for first year students at Anna University and campus colleges
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!