×

உயர் அதிகாரிகள் கொல்ல சொன்னால் செய்வீர்களா? எஸ்பி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி

சென்னை:  பெண் அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். உயர் அதிகாரிகள் கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு டிஜிபி மீது புகார் கொடுக்க சென்ற பெண் அதிகாரியை தடுத்ததாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி டி.கண்ணன் மீதும் பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து எஸ்பி கண்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சஸ்பெண்டான எஸ்பி கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்ணன் தரப்பில் ஆஜரான வக்கீல், கூடுதல் டிஜிபி அறிவுறுத்தலின்படியே மனுதாரர் செயல்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு, பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். காவல்துறையிலேயே அவ்வாறு நடத்தப்படாதது அவமானகரமானது. காவல்துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா, உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று சரமாரி கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்பி கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.  மேலும் விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

Tags : ICourt ,SP , What if high officials tell you to kill? ICourt question in SP ongoing case
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...