பழனி, திருச்செந்தூர், திருத்தணி உட்பட 10 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள்: அறநிலையத்துறை தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. முக்கியமாக, அறம் சார்ந்த பணிகள் பள்ளி, கல்லூரிகள், சமயம் சார்ந்த பள்ளிகள், கருணை இல்லங்கள், அன்னதானக் கூடங்கள், சமய நூலகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப்பள்ளிகள் தவில், நாதஸ்வர இசைப்பள்ளிகள் போன்றவை ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது பக்தர்கள் அதிகளவில் வரும் 10 கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மையங்கள் ரூ.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் ஆகிய கோயில்களில் முதலுதவி மையங்கள் தொடங்க முதல்கட்ட ஆரம்ப பணிகள் நடந்து வருகிறது. இந்த மையங்களில் 2 மருத்துவர், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் ஒப்பந்த கால அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>