×

மோசடி செய்தவர்கள் உலகில் எங்கும் ஓடி ஒளிய முடியாதபடி சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசாரணை அமைப்புகளின் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்ற நினைக்கும் மோசடி பேர்வழிகள் யாரும், எங்கும் பாதுகாப்பாக இருக்கக் கூடாது. உலகில் எந்த மூலையிலும் அவர்கள் ஓடி ஒளிய முடியாதபடி சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: ஊழல், மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது, அனைவரும் நீதியை நாடுவதற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த சக்திக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அரசு நடைமுறையில் ஊழலை அனுமதிக்க புதிய இந்தியா ஒருபோதும் தயாராக இல்லை. முந்தைய அரசாங்கங்கள் மற்றும் அதன் அமைப்புகள், அரசியல் மற்றும் நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் விருப்பங்களால் தடுமாறி நின்றன. அனைத்தையும் அரசே கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் இன்றைய அரசியலின் விருப்பம், ஊழலை தகர்ப்பதாகும். ஊழலை ஒழித்து நிர்வாகத்தில் தொடர் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும்.

கடந்த 6-7 ஆண்டுகளில் ஊழலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசு வெற்றியடைந்துள்ளது. இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் இல்லாமல் அரசு திட்டப் பலன்களை பெற முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது. ஊழல் செய்பவர்கள் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும், எங்கு சென்றாலும் தப்ப முடியாது என மக்கள் உணர்கின்றனர். நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் தொழில் தொடங்குவது, செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெற பழைய வழக்கொழிந்த விதிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தற்போதைய சவால்களுக்கு ஏற்ற வகையில் பல கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசின் மின்னணுச் சந்தை, மின்னணு-ஒப்பந்த முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் அடையாள நடைமுறைகள், விசாரணையை எளிதாக்கியுள்ளன. நாடு முதன்மை என்ற லட்சியத்தை நாம் எப்போதும் முன்னணியில் வைத்திருக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக செயல்படும் அதிகாரிகளுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பேன். தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் மூலம் ஊழலை ஒழிக்க முடியும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அச்சப்பட வேண்டாம். நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றும் யாரும் எங்கும் பாதுகாப்பாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உலகின் எந்த மூலையிலும் அவர்கள் ஓடி ஒளிய முடியாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய இந்தியாவுக்குத் தடையாக இருக்கும் நடைமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம், சிபிஐ மற்றும் இதர ஊழல் தடுப்பு அமைப்புகள் அகற்ற வேண்டும். ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற புதிய இந்தியாவின் கொள்கையை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அரசின் நடைமுறையைக் கண்டு ஏழை மக்கள் பயப்படுவதை மாற்ற வேண்டும். நாட்டில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க சிபிஐ மற்றும் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* ஆன்லைன் நடைமுறை ஊழலை ஒழித்தது
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘இந்த அரசு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான், ஆவணங்களை சரிபார்க்கும் பல நடைமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. பிறப்பு சான்றிதழ், ஓய்வூதியத்துக்கான ஆயுள் சான்றிதழ் போன்றவை இடைத்தரகர்கள் இல்லாமல் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படுகின்றன. குரூப் சி மற்றும் டி பணியிடங்களுக்கான நேர்காணல் முறைகள் நீக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு முன்பதிவு முதல் வரிதாக்கல் வரை ஆன்லைன் நடைமுறைகள் ஊழல்களை குறைத்துள்ளன’’ என்றார்.

Tags : CBI ,Modi , CBI should take action to prevent fraudsters from fleeing anywhere in the world: PM Modi addresses joint inquiry
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...