அதிமுக மாஜி பெண் அமைச்சரின் மகன் திருச்சி ஆவின் மேலாளர் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி ஆவினுக்கு மற்றுப்பணியில் வந்த சென்னை ஆவின் இணைய பொறியியல் மேலாளரான அதிமுக மாஜி பெண் அமைச்சரின் மகன் பணியில் மெத்தனமாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் உள்ளது. இந்த இணையத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் திருச்சி உட்பட 24 இடங்களில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள பால் உற்பத்தியாளர் இணையத்தில் ஹரிராம் என்பவர் பொறியியல் மேலாளராக பணியாற்றி வந்தார்.

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஆவின் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மாற்று பணியாக ஹரிராம் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருச்சி ஆவின் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு வாங்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதை சரிவர ஹரிராம் கவனிக்கவில்லை. பராமரிக்கவும் தவிறவிட்டார் என கூறப்படுகிறது. திருச்சி கூட்டுறவு ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர் இணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாய்லரை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியியல் மேலாளர் ஹரிராமிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் பாய்லரை சரி செய்யாமல் விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணியில் மெத்தனமாக இருந்ததாக கூறி, ஹரிராமை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி கடந்த 10 நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். அதன்படி ஹரிராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறியியல் மேலாளர் ஹரிராம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை  முன்னாள் அமைச்சருமான வளர்மதியின் 2வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>