பஞ்சாப் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்: காங்கிரஸ் தலைமைக்கு ராவத் கோரிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இடையிலான கடும் மோதல் போக்கை சமாளிப்பதற்குள் கட்சித் தலைமைக்கு, அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்துக்கு போதும் என்றாகி விட்டது. ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த சித்து 13 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வாக்குறுதி அளித்தார். இருப்பினும், சன்னியின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று சித்து கூறியுள்ளார். இந்நிலையில், ஹரீஷ் ராவத் தனது பேஸ்புக் பக்கத்தில், `பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்கள் அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க உள்ளதால், அங்குள்ள தேர்தல் பணிக்காக நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும். கட்சித் தலைமை என்னை விடுவித்து, உத்தரகாண்ட்டில் முழு நேரப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

பிறந்த இடத்துக்கு பணியாற்றினால் தான், வேலை பார்த்த இடத்துக்கு நேர்மையாக நடந்து கொள்ள முடியும்,’ என்று கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் கட்சித் தலைமைக்கு மறைமுகமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது, தன்னை விடுவிக்கும்படி நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

More