×

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: பிரதமர் மோடி

குஷிநகர்: உத்தரப்பிரதேசத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் ரூ.260 கோடி மதிப்பில் புதியதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள புத்த தலங்களை இணைக்கும் வகையிலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த மதத்தினர் வருகையை எளிதாக்கும் வகையிலும் இந்த விமான நிலையத்தை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

குஷிநகரில் தான் புத்தர் முக்தி அடைந்தார். குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து நேற்று பிரதமர் மோடி பேசியதாவது: ‘சர்வதேச விமான நிலையம் உலகின் பல்வேறு பகுதிகளை இணைப்பதோடு, சுற்றுலா வளர்ச்சிக்கு துணைபுரியும். ஒட்டுமொத்த பொருளாதார சுற்றுச்சூழலுக்கும் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் உதவும். புத்தர் தொடர்புடைய இடங்களின் மேம்பாட்டுக்கு அரசு சிறப்பு கவனம்  செலுத்துகின்றது. குஷிநகரை மேம்படுத்துவது என்பதில் உத்தரப்பிரதேச அரசு மற்றும் ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பகுதிகளில் குஷிநகரும் ஒன்றாகும்.

சமீபத்தில் இந்திய அரசு ஏர் இந்தியா  விமான சேவையை தனியாரிடம் ஒப்படைத்தது மிகப்பெரிய நடவடிக்கையாகும்.  விமான துறையில் ஒரு  புதிய ஆற்றலை கண்டிப்பாக கொடுக்கும். இந்திய அரசின் திட்டங்கள் பல  நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. ஏர் இந்தியா வர்த்தக ரீதியில் வளர்ச்சி பெறும். பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’. இவ்வாறு பிரதமர்  பேசினார். புதிய விமான நிலையத்துக்கு முதல் விமானமாக இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் குஷிநகர் வந்தது.

இந்த விமானத்தில் புத்த மத துறவிகள் குழு மற்றும் கேபினட் அமைச்சர் நமல் ராஜபட்சே தலைமையிலான அரசு பிரதிநிதிகள் வந்திறங்கினர். பிரதமர் மோடியை சந்தித்த நமல் ராஜபட்சே, அவருக்கு பகவத் கீதை பரிசளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே சுற்றுலா மிகவும் வலுவானதாக உள்ளது. நிறைய இந்தியர்கள் இலங்கை வருகிறார்கள். இலங்கை பயணிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வருகின்றனர்.

குறிப்பாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு வருகின்றனர். புதிய விமான நிலையத்தின் மூலமாக இலங்கையில் இருந்தும் உலகம் முழுவதிலும் இருந்து புத்தமத பயணிகள் அதிக அளவில் இந்தியா வருவார்கள்’என்றார். தொடர்ந்து மகாபரிநிர்வாணா கோயிலில் நடந்த அபிதம்மா விழாவில் கலந்து கொண்ட பிரதமர், இன்றளவும் இந்திய அரசியலமைப்பின் உத்வேகமாக திகழ்பவர் புத்தர். நாடாளுமன்றத்தில் நுழையும்போது ‘தர்மசக்ரா பிரவர்தன்யே’என்ற மந்திரத்தை காண முடியும்.

புத்தர் உலகளாவியவர். புத்தரின் செய்திகளை நாம் ஏற்றுக்கொண்டால் யார் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும் என்ற பாதையை நாம் உணரலாம்’ என்றார்.

மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்
குஷிநகரில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையுடன் இந்த கல்லூரி அமைக்கப்படவுள்ளது. 2022-2023ம் ஆண்டு முதல் 100 மருத்துவ மாணவர்களுடன் மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கும். ரூ.280 கோடி மதிப்பில் இந்த மருத்துவ கல்லூரி கட்டப்படுகின்றது. மேலும் ரூ.180 கோடி மதிப்பில் 12 மேம்பாட்டு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  


Tags : Kushinagar International Airport ,Modi , Kushinagar International Airport will create new jobs: PM Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...