×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கு அனுமதியில்லை: தேவஸ்தானம் தகவல்..!!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் செல்லும் தரிசனத்திற்கு தற்போதைக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கோயில் தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு கவுன்டர் மூலம் தினமும் இருநேரங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இதேபோல், சுபதம் நுழைவு வாயில் வழியாக ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 20ம்தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தரிசனமும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு 300 சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம், ஆன்லைனில் நடைபெறும் கல்யாண உற்சவ தரிசனம், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், சமூக வலைதளங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக தவறான தகவல் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. தற்போதைக்கு இந்த தரிசனம் தொடங்கும் எண்ணம் இல்லை. எனவே, பக்தர்கள் இதனை நம்ப வேண்டாம். இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் பக்தர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Tirupati Seventh Temple ,God , Tirupati Temple, Devasthanam, Info
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்