×

அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளித்த நிலையில் டெங்கு வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு: சென்னை உள்பட 20 மருத்துவ கல்லூரிகளில் பரிசோதனை

லக்னோ: அறிகுறி அடிப்படையில் டெங்குக்கு சிகிச்சை அளித்த நிலையில் தற்போது டெங்கு வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 20 மருத்துவ கல்லூரிகளில் இதற்கான பரிசோதனைகள் தொடங்கப்படவுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்கள் கொரோனாவுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், சில மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன. வடமாநிலங்களில் ெடங்கு பாதித்த குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு மாதங்களில் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், டெங்கு தொற்று பாதித்தவர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு, அறிகுறிகளின் அடிப்படையிலேயே சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒன்றிய மருந்து ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் டெங்குக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். தற்போது, இந்த ஆராய்ச்சியில் பெரும் வெற்றியை விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.   

மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி, நாடு முழுவதும 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதியதாக கண்டறியப்பட்ட டெங்குக்கான மருந்தை நோயாளிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10,000 டெங்கு நோயாளிகளுக்கு முதற்கட்டமாக இந்த மருத்தை செலுத்தவுள்ளனர். மும்பையில் செயல்படும் பெரிய மருந்து நிறுவனம் ஒன்று, இந்த மருந்தை தயாரிக்கிறது. புதியதாக கண்டறியப்பட்ட டெங்கு மருந்தானது, தாவரங்களில் இருந்து பெறப்பட்ட மூலக்கூறில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ), மனித சோதனைக்கான அனுமதியை மேற்கண்ட மருந்து நிறுவனம் பெற்றுள்ளது. கான்பூர், லக்னோ, ஆக்ரா, மும்பை, தானே, புனே, அவுரங்காபாத், அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு, மங்களூரு, பெல்காம், சென்னை, சண்டிகர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், கட்டாக், குர்தா, ஜெய்ப்பூர், நாத்வாரா ஆகிய 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படும்.

சோதனை முறையில் டெங்குக்கு மருந்து கொடுக்கப்படுவதால், சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நோயாளி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். நோயாளியின் விருப்பத்தின் பேரில் மருந்து செலுத்த வேண்டும். மருந்து கொடுத்தபின்னர் ெதாடர்ந்து எட்டு நாட்கள் நோயாளியை மருத்துவமனையில் தங்க வைக்க வேண்டும். அதன்பின், 17 நாட்கள் வரை அவரை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த ஆதாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆக்ராவில் உள்ள எஸ்.என்.எம்.சி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரசாந்த் குப்தா கூறுகையில், ‘மருந்து நிறுவனத்திற்கும், மருத்துவக் கல்லூரிக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெங்குக்கு மருந்து கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் முறையான அனுமதியைப் பெறுவதும் அவசியம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்றார்.


Tags : Chennai , Dengue, medicine, invention
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...