×

ம.பி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக பெண் வேட்பாளரிடம் அமைச்சர் அநாகரிகம்: சிவராஜ் சிங் சவுகானுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

போபால்: மத்திய பிரதேச இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக பெண் வேட்பாளரிடம், ஆளுங்கட்சி அமைச்சர் நடந்து கொண்ட விதம் அநாகரிகமாக இருந்ததாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மக்களவை மற்றும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராய்கானி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரதிமாவுக்கு ஆதரவாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரசாரம் செய்தார். மேடையில் சிவராஜ் சிங் சவுகானுக்கும், அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவுக்கு நடுவில் வேட்பாளர் பிரதிமா அமர்ந்திருந்தார். அப்போது சிவராஜ் சிங்குடன் பேச முயன்ற பிரிஜேந்திர சிங், வேட்பாளர் பிரதிமா பாக்ரி தொடையில் கை வைத்துக் கொண்டே பேசினார்.

அதிர்ச்சியடைந்த பிரதிமா பாக்ரி, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின்னர் முதல்வர் சிவராஜ் சிங் வேட்பாளரை ஆதரித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே ஓட்டு கேட்டபடி பிரதிமா பாக்ரி நின்று கொண்டிருந்தபோது, பின்னால் இருக்கையிலிருந்த அமைச்சர் பிரிஜேந்திர சிங், வேட்பாளரின் கூந்தல் முடியில் எதையோ தேடுவதை போன்று தொட்டார். உடனே திரும்பி பார்த்த பிரதிமா, அமைச்சரை முறைத்து பார்த்தார். அப்போது அமைச்சர் தனது மூக்குக் கண்ணாடி கூந்தலில் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேடையில் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்ட அமைச்சரால், வேட்பாளர் பிரதிமா முகம் சுழித்தபடி காணப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘வெட்கமில்லாத செயல். பாஜக வேட்பாளரிடம் பாஜக அமைச்சர் அநாகரீகமாக நடந்து கொண்டார். வேட்பாளர் சங்கடத்துடன் அமர்ந்து இருப்பது அவரது முகத்திலேயே தெரிகிறது. சிவராஜ் சார், பாஜக தலைவர்களிடமிருந்து தேசத்தின் மகளைக் காப்பாற்றுங்கள்’ என்று தெரிவித்துள்ளது. இதேபோல், ஏற்கனவே பாலியல் தொடர்பான புகார்களில் சிக்கிய பாஜக தலைவர்களின் செய்திகளையும், புகைப்படங்களையும் சமூக தளவாசிகள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Tags : Shivraj Singh Chauhan ,BJaka ,B midterm , Madhya Pradesh, BJP female candidate, minister, indecent
× RELATED டெல்லி சென்று எனக்காக பதவி கேட்பதை விட...