×

புது கட்சியை தொடங்குகிறார் அமரீந்தர் சிங்: 4 முனை போட்டியால் கலகலக்கும் பஞ்சாப் தேர்தல்: கணவரின் முடிவால் சிக்கலில் தவிக்கும் மனைவி

சண்டிகர்: பஞ்சாப்பில் புது கட்சியை அமரீந்தர் சிங் தொடங்க உள்ள நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கணவரின் திடீர் முடிவால் காங்கிரஸ் எம்பியாக உள்ள அவரது மனைவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் கடந்த ஒரு மாதத்திற்கு முன், தனது முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகினார். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவியேற்றார். அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த அமரீந்தர் சிங், தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அக்கட்சி பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இவரது முடிவை பாஜக வரவேற்றுள்ளது.

அமரீந்தர் சார்பில் அவரது ஆலோசகர் ரவின் துக்ரல் வெளியிட்ட டுவிட்டர் பதவில், ‘புதிய கட்சியை அமரீந்தர் விரைவில் தொடங்குவார். விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளார். எதிர்கால பஞ்சாபிற்கான போர் தொடங்கிவிட்டது. பஞ்சாப் மக்களும், விவசாயிகளும் கடந்த ஒரு வருடமாக தங்கள் பிழைப்புக்காக போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் சாதகமாக அமைந்தால், 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம். திண்டா மற்றும் பிரம்மபுரத்தில் உள்ள அகாலி குழுக்களுடன் இணைந்து கூட்டணி அமைப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் பதவியை அமரீந்தர் துறந்தாலும் கூட, தற்போது வரை அவர் எம்எல்ஏவாக உள்ளார். மேலும், அவரது மனைவி பரினேத் கவுர் எம்பியாக உள்ளார். அமரீந்தர் சிங் புதிய கட்சியை தொடங்கும் பட்சத்தில், அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. இருந்தும், அவர் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கட்சி தலைமை கூறிவருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பரினேத் கவுர் அளித்த பேட்டியில், தான் காங்கிரசில் இருந்து விலகப் போவதில்லை என்றும், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமரீந்தர் சிங் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பஞ்சாப்பின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேண முயற்சிப்பேன் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவை இரண்டும் பஞ்சாப்பில் இல்லை’ என்றார். வரும் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி, அமரீந்தரின் புதிய கட்சி - பாஜக, ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம் என்று நான்கு முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


Tags : Amarinda Singh ,Punjab , New Party, Amarinder Singh, Punjab Election
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து