×

சிங்கு எல்லையில் சீக்கியர் கொலை திட்டமிட்ட சதி?: விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக பஞ்சாப் து.முதல்வர் புகார்..!!

சண்டிகர்: சிங்கு எல்லையில் தலித் சமூகத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவரை படுகொலை செய்த நிகாங் குழுவினருக்கும், ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கும் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்த குழுவில் நிகாங் பிரிவின் தலைவர் பாபா அமந்த்சிங் இடம்பெற்றதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே சிங்கு எல்லையில் சீக்கியரான லக்பீர் சிங் கொடூர முறையில் கொல்லப்பட்டு சாலை தடுப்பின் மீது தொங்கவிடப்பட்டதாக சுக்ஜிந்தர் சிங் கூறியிருக்கிறார். கொலை வழக்கில் கைதாகியுள்ள நபர்களுக்கு ஆதரவாக நிகாங் குழு தலைவர் பாபா அமந்த்சிங் கருத்து தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் டெரண்டன் மாவட்டத்தில் உள்ள சீமா கலன் எனும் கிராமத்தை சேர்ந்த லக்பீர் சிங் ஒரு ஏழை தொழிலாளி.

அவரை சிங்கு எல்லைக்கு யார் அழைத்து சென்றனர்? என்பது பற்றி விசாரித்து வருவதாக துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் கூறியிருக்கிறார். இதுபோன்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகரும் சிங்கு எல்லையில் சீக்கியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு சதி என்று சாடியிருக்கிறார். இதில் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.


Tags : Singhu border ,Punjab ,Chief Minister , Sikhs, murderers, peasants, Deputy Chief Minister of Punjab
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து