வேலூர் பாலாற்றில் வெள்ளம் வந்தும் பயனில்லை புதர் மண்டி தூர்ந்து போன அன்பூண்டி சின்ன ஏரி

* ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியது * தூர் வாரி சீரமைக்கும் நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர் : வேலூர் அப்துல்லாபுரம் சர்வீஸ் சாலையோரம் உள்ள அன்பூண்டி சின்ன ஏரி புதர் மண்டி தூர்ந்து போனதால், பாலாற்றில் வெள்ளம் வந்தும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சமீபமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் அணைகள் நிரம்பி வழிகிறது.

இதனால் தண்ணீர் திறக்கப்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க பாலாற்றிலும், நீர்நிலைகளிலும் பொதுமக்கள் யாரும் ஆபத்தை உணராமல் குளிப்பது, வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.

மேலும் பாலாற்றில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் திருப்பிவிடப்படும் தண்ணீரால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இதேபோல் வேலூர் அப்துல்லாபுரம் சர்வீஸ் சாலையோரம் உள்ள அன்பூண்டி சின்ன ஏரிக்கும் பாலாற்று வெள்ளத்தால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அன்பூண்டி சின்ன ஏரி தூர்வாரப்படாமல் முட்புதர்கள் மண்டி தூர்ந்து போய் உள்ளது. மேலும் ஏரியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் வந்தம் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்த அளவு தண்ணீர் வந்தவுடன் ஏரி நிரம்பி கோடி போகிறது. மேலும் அங்குள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

எனவே மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பாலாற்று வெள்ளத்தால் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆனால் வேலூர் அன்பூண்டி சின்ன ஏரி கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதற்கிடையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை தற்போது வெள்ளம் சூழ்துள்ளது.

இதனால் சுமார் 40 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதோடு, அங்குள்ளவர்களுக்கு மாற்று இடத்தில் வசிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் ஏரியை தூர் வாரி தண்ணீரை தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றனர்.

Related Stories:

More
>