×

வடகிழக்கு பருவமழையையொட்டி செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்தும் - செம்பரம்பாக்கம் ஏரியில் ரூ.2.24 கோடி செலவில் நடைபெற்று வரும் மதகுகளின் அடைப்பான்களை சீரமைக்கும் பணிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று வடகிழக்கு பருவமழையையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதி தன்மை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

சென்னை  மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியானது 21.20 அடி உயரமும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். தற்போது இப்புழல் ஏரியில் 18.88 அடி உயரமும், 2786 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் உபரி நீர் கால்வாயின் மொத்த நீளம் 13500 மீட்டர் ஆகும். சென்னை மண்டலத்திற்கு வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ளத்தடுப்பு பணிக்காக மொத்தம் ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதில் புழல் செங்குன்றம் ஏரியின் உபரிநீர் கால்வாய், அம்பத்தூர் ஏரி உபரி நீர் கால்வாய், தனிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றிற்கு ரூ.77.50 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.  

இதனால் கால்வாயில் உள்ள நீர்த்தாவரங்கள் மற்றும் ஆகாய தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் செல்ல ஏதுவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்தும், ஏரியின் 5 மற்றும் 19 கண் கொண்ட மதகுகளில் ஏற்பட்டுள்ள அடைப்பான்களை 2 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில்  சீரமைக்கும் பணிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடித்திடவும், வடகிழக்கு பருவமழையொட்டி ஏரியின் கரைகளை தொடர்ந்து கண்காணித்திடவும்  பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகளில் உள்ள அனைத்துவிதமான கழிவுகளையும் அகற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார். சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானதாகும். செம்பரம்பாக்கம் ஏரியானது தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இந்த ஏரி பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.  இந்த ஏரி பாலாறு அணைகட்டு முறையின் கடைநிலை ஏரியான திரும்பெரும்புதூர் ஏரியிலிருந்து சௌத்ரிகால் வாய்க்கால் மூலமாக உபரிநீரை கொண்டு வருகிறது.

மேலும், கூவம் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொரட்டூர் அணைகட்டிலிருந்து நீர்வரத்து பெறக்கூடிய மற்றொரு முறையுமாகும். மேற்படி ஏரியிலிருந்து வெளியேறும் மிகைநீர் அடையாற்றில் விழுந்து தென்சென்னை மூலமாக அடையாறு முகத்துவாரத்தில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இனைப்பு கால்வாய் மூலமாக கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு ஏதுவாக இந்த ஏரி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் இரண்டாவது கடைநிலை ஏரியாகும். மேலும், கிருஷ்ணா கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரளவின் உயரத்தை 22 அடியிலிருந்து 24 அடி கொண்டதாக 2 அடி உயர்த்தியும், அதன் கொள்ளளவானது 3120 மில்லியன் கன அடியிலிருந்து 3645 மில்லியன் கன அடியாக 1996ல் உயர்த்தப்பட்டது.

தற்போதைய நீரின் ஆழம் 20.77 அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயின் மொத்த நீளம் 6200 மீட்டர் ஆகும். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்ஏற்பாடாக 37.50 இலட்சம் ரூபாய் செலவில் மணப்பாக்கம், குன்றத்தூர், கோவூர், தந்தி கால்வாய், நத்தம் கால்வாய், ஆகிய கால்வாய்களில் உள்ள நீரியல் தாவரங்கள், ஆகாய தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் சென்று அடையாற்றில் கலக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பதற்காக 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2007-ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையம் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல்வேறு ஏரிகளில் உள்ள நீரின் இருப்பு மற்றும் நகரின் குடிநீர் தேவைக்கு ஏற்ப செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரை எடுத்து சுத்திகரித்து சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு ஊரகத் தொழிற் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். சுதர்சனம், திரு. துரை சந்திரசேகர், திரு.கே.பி. சங்கர், திரு.கு. செல்வப்பெருந்தகை, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சி. விஜயராஜ் குமார், இ.ஆ.ப.,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அ. மீனா ப்ரியாதர்ஷினி இ.ஆ.ப.,  நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Sembarambakkam ,Puhal , Northeast Monsoon, Sembarambakkam, Puhal Lake, Chief Minister MK Stalin
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...