நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வறிக்கையை 15 நாட்களில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்போம்-அமைச்சக துணை இயக்குனர் தகவல்

ஒரத்தநாடு : ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் முகமது ஷாகிர்ஹான் தலைமையிலான குழுவினர் ஒரத்தநாடு பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு ஒரத்தநாடு, புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது கொள்முதல் நிலையங்களில் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருக்கும் நெல் மணிகளை கையால் அள்ளி அள்ளி எடுத்து ஈரப்பதத்தின் தன்மை குறித்து பரிசோதித்தனர்.

மேலும் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக நெல்லை கொண்டுவந்துள்ள விவசாயிடம், நீங்கள் எப்போது நெல்லை இங்கு கொண்டு வந்தீர்கள். நெல்லை இங்கு கொட்டி காயவைக்கும் போது அப்போது மழை பெய்ததா? அப்போது உங்களுடைய நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு இருந்தது என்று அக்குழுவினர் கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர். பின்னர் அங்கு உள்ள ஈரப்பதமானி கருவி மூலம் நெல்லைக் கொட்டி பரிசோதித்தனர். அதன் பின்னர் துணை இயக்குனர் முகமது ஷாகிர்ஹான் நிருபர்களிடம் கூறியதாவது:

நெல்லின் ஈரப்பத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுச் செய்து வருகிறோம். இந்த ஆய்வறிக்கையை இன்னும் 15 நாட்களுக்குள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்போம் என்றார்.மேலும் இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் சங்கீதா, தஞ்சை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் நெல் குவியலிலிருந்து மாதிரிகள் சேகரித்தனர். மேலும் ஈரப்பதம் அளவிடும் கருவியில் மாதிரியை வைத்து ஆய்வு செய்தனர். மேலும் நெல்லை சிறிதளவு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

தஞ்சை:

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் முகமது ஷாகிர்ஹான்  தலைமையிலான குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று திடீரென ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக இக்குழுவினர் தஞ்சை அருகே அரசூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது கொள்முதல்  நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருக்கும் நெல் மணிகளை கையால்  அள்ளி எடுத்து ஈரப்பதத்தின் தன்மை குறித்து பரிசோதித்தனர்.

அப்போது கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக நெல்லை கொண்டு வந்துள்ள விவசாயி மதிவாணனிடம், நீங்கள் எப்போது நெல்லை இங்கு கொண்டு வந்தீர்கள். நெல்லை இங்கு கொட்டி காயவைக்கும் போது அப்போது மழை பெய்ததா? அப்போது உங்களுடைய நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு இருந்தது என்று அக்குழுவினர் கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

Related Stories:

More
>