கோத்தகிரியில் பொலிவிழந்து காணப்படும் நேரு பூங்கா

கோத்தகிரி :  கோத்தகிரியில் பராமரிப்பு இன்றி நேரு பூங்கா பொலிவிழந்து  காணப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு கோத்தகிரி பேரூராட்சி மூலம் பாராமரிக்கப்பட்டு வரும் பூங்காவாகும். இங்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் கொண்டாடப்படும் கோடைவிழாவின் தொடக்கமாக காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக அதுவும் நடைபெறவில்லை. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் தொடங்கி மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் மற்றும் மாவட்டத்தில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.

மேலும், பூங்காவின் நடைபாதையில் உள்ள சங்கிலியால் அமைக்கப்பட்ட வேலிகள் முறிந்தும், சிறு தடுப்புகள் இடிந்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புல் தரைகளில் காட்டுச் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இந்த சூழலில் மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பொதுவாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு கோத்தகிரி வழியாக சமவெளிப் பகுதிகளுக்கு செல்லும் போது கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவை பார்வையிடுவது வழக்கம்.

ஆனால், தற்போது எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் அந்த நிலையும் மாறி சுற்றுலா பயணிகள் இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, பூங்காவை நன்கு பராமரித்து பூங்காவை சுற்றி முற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து நன்கு பராமரிக்கப்பட வேண்டும் எனவும், சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories: