குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு வந்த பெண் சாவு-உறவினர்கள் 2வது நாளாக மறியல்

காரைக்குடி : புதுவயலில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு வந்த பெண் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காரைக்குடி அருகே புதுவயலை சேர்ந்தவர் செல்வக்குமார். சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புதுவயலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் மற்றும் மயக்கவியல் டாக்டர்கள் வந்து செய்வது வழக்கம்.

இதன்படி நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி தனது தாயுடன் வந்து குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வந்துள்ளார். அவருக்கு ஊசி போடப்பட்டபோது, வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து மேல்சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆரம்ப சுகாதார நிலைய வாகனத்தில் கொண்டு செல்ல முயன்றபோது அதில் டீசல் இல்லை என கூறியுள்ளனர். இதனால் சக டாக்டர்களே காரில் காரைக்குடி கொண்டு வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

டாக்டர்களின் தவறான சிகிச்சையால் இறந்துள்ளதாகவும், சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலைய நர்ஸ், வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் நேற்று முன்தினம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரச்னையில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்படிக்கை ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை புதுவயலில் அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்.பி செந்தில்நாதன், ஏடிஎஸ்பி அன்பு, டிஎஸ்பிகள் வினோஜி, ஆத்மநாதன், தாசில்தார் மாணிக்கவாசகம், மருத்துவத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி இறப்புக்கு உரிய இழப்பீடு அரசிடம் பெற்றுதருவது, நர்ஸ், டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பது, போஸ்ட்மார்டம் வீடியோ பதிவு செய்வது, மருத்துவ கவனகுறைவால் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>