×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் பத்தி தயாரிக்கும் பணி தீவிரம்

ஈரோடு : ஈரோட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் பத்தி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டு பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், தற்போது பட்டாசு உற்பத்தி பணியும், அதேபோல் பட்டாசுகளின் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் தற்போதே பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் பத்தி தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பத்தி தயாரிப்பாளரான ஆதிராமன், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:  ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 2.5 அடி நீளமுள்ள பத்தியை 10 ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை தயார் செய்து விற்பனை செய்வோம். இதனை குடிசை தொழிலாக செய்து வருகிறோம். பத்தி தயாரிப்புக்கு மூலப்பொருள்களான கரித்தூள், மரத்தூள், தென்னங்குச்சி, கரித்தூள் குச்சியில் ஒட்டுவதற்கு ஜிகிட் என்ற பசை போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.

பத்தி தயாரிப்பு பணிகளை 3 மாதம் முன்பே துவங்கி விட்டோம். நாங்கள் தயாரித்த பத்திகளை ஈரோடு மாநகர் மட்மின்றி மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி உள்ளிட்ட மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்டர் கொடுத்தால் அவர்களுக்கும் தயாரித்து அனுப்பி வைக்கிறோம்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு காரணமாக பத்தி விற்பனை மந்தமாக நடந்தது. தற்போது தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், பத்தி குச்சிகள் வழக்கத்தை விட அதிகளவில் விற்பனையாகும் என எதிர்பார்கிறோம். ஒரு பத்தி குச்சி தயாரிப்பதற்கு ரூ.5 முதல் ரூ.6 வரை உற்பத்தி செலவாகிறது. கடைகளில் ரூ.8 முதல் ரூ.10வரை விற்பனை செய்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரமே இருப்பதால் பத்தி தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Deepavali festival , Erode: Fireworks are being set up in Erode for the Deepavali festival.
× RELATED தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை...