திருப்பத்தூர் நகராட்சி 32வது வார்டில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சி 32வது வார்டில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு தில்லைநகர் திருத்திமேடு பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்காக கடந்த 18 வருடங்களுக்கு முன்பு இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாமல், அப்பகுதிமக்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கால்வாய், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்தும் இன்னும் மின்சார வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது.

இப்பகுதி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் முள்ளும், புதருமாக மாறியுள்ளது. இதனால், பாம்புகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. கால்வாய் வசதியின்றி கழிவுநீர் குளம்போல் தேங்குகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இதேநிலை நீடித்தால் நாங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More