×

உத்தரகாண்டில் கொட்டி தீர்க்கும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு!: முதல்வர் புஷ்கர் சிங் அறிவிப்பு..!!

டேராடூன்: உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் அறிவித்துள்ளார். உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு செல்ல முடியாத அளவுக்கு சாலைகளும், பாலங்களும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல பகுதிகளில் உள்ளூர் மக்களே  மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் சேதமடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் அறிவித்துள்ளார். இதனிடையே ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று உத்தரகாண்ட் சென்று அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். மேலும் நாளை, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அமித் ஷா வான்வழியாக பார்வையிட உள்ளார். நேற்றும், இன்றும் மழை குறைந்துள்ளது. இதனால் மீட்புபணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags : Vidakana ,Principal ,Pushkar Singh , Uttarakhand, heavy rains, compensation, Chief Minister Pushkar Singh
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...