தெலுங்கு தேச கட்சியினரின் வீடு அலுவலகங்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் : ஜெகன் மோகனின் ஆட்சியை கலைக்க வலுக்கிறது கோரிக்கை!!

ஹைதராபாத் : ஆந்திராவில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை விமர்சனம் செய்ததால் தெலுங்கு தேசம் கட்சியினரின் வீடு அலுவலகங்களை ஒய்எஸ்ஆர் கட்சியினர் சூறையாடினர். இதனை கண்டித்துள்ள சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேச கட்சியின் செய்தி தொடர்பாளர் பட்டாபிராம், ஆந்திர இளைஞர்களை ஜெகன் மோகனின் அரசு கஞ்சா மற்றும் போதைக்கு அடிமை ஆக்கி வருவதாக விமர்சித்து இருந்தார். மேலும் மாநில வளர்ச்சிக்கு ஆளும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சாடினார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தாக்குதல் நடத்தினர். மங்களகிரியில் உள்ள பட்டாபிராம் வீடு சூறையாடபட்டத்துடன் அங்கிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. மங்களகிரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் தெலுங்கு தேச கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன.இந்த சம்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மக்கள் சீரழிக்கப்படுவதை ஒரு குடிமகன் தட்டி கேட்க கூடாதா என்று கேள்வி எழுப்பினார். ஆந்திராவில் நடந்துள்ள வன்முறை மக்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில டிஜிபி உறுதியளித்துள்ளார். இதனிடையே மங்களகிரியில் உள்ள கட்சியின் மத்திய அலுவலகத்தில் நடந்த வன்முறையை கண்டித்து  தெலுங்கு தேச கட்சி இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்துகிறது.

Related Stories: